தேனி: தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கவும், அதனைக் கண்காணிக்கவும் சில நாட்களுக்கு முன்பு ஏழுவர் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது.
இந்த குழுவில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவில் கேரளாவைச் சேர்ந்த நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர்கள் இரண்டு பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரள அலுவலர்களை குழுவில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கேரள அலுவலர்கள் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவில் இணைந்துள்ளதை கண்டித்தும், அவர்களை நீக்கக் கோரியும் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் நில வணிகர் சங்கத்தினர் தேனி மாவட்டம் தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள லோயர் கேம்ப் பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த முற்றுகை ஆர்ப்பாட்டம் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள லோயர் கேம்பில் இருந்து நடை பயணமாக குமுளிக்கு செல்ல இருந்த விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் லோயர் கேம்பிலேயே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எச்சரிக்கை
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினரின் வேண்டுகோளை அடுத்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேசிய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், கேரள அலுவலர்களை முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்காவிட்டால், தமிழ்நாடு - கேரளா எல்லையான குமுளியில் பெரும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
இதையும் படிங்க |
மேலும் பேபி அணையில் பராமரிப்பு பணிக்கு இடையூறாக உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு நீர்வள ஆணையம் உத்தரவு வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விரிவடையும் குழு
2014-ம் ஆண்டில், முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலங்களின் போது ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
பின்னர் 2022-ஆம் ஆண்டில், நியமிக்கப்பட்ட குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவரை சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழுவில் மேலும் வல்லுநர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.