சென்னை: சென்னை திருவிக நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு மோர், பழங்கள், குளிர் பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "உலகம் முழுவதும் போற்றப்படும் நாள் மே தினம். தியாகத்தால் உருவான தினம் தான் தொழிலாளர் தினம். இந்தியாவில் சிந்தனை சிற்பி சிங்கார வேலர் தான் முதன் முதலில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார், அவருக்கு எங்களது வீரவணக்கம்.
திமுக, தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர். தேர்தல் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்றும், அதன் பலன்களை அனுபவிக்க முடியவில்லை. அவர்களுக்கான நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை. இந்த ஆட்சியில் தொழிலாளர்கள் தட்டேந்தி பிச்சை கேட்டு போராடும் நிலைமையில் உள்ளனர்.
தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி. கோழைகளை எனக்குப் பிடிக்காது. தைரியசாலியைத்தான் பிடிக்கும்.