சென்னையில் இருந்து 120 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தது.
கரையைக் கடந்த ஃபெஞ்சல்; இயல்பு வாழ்க்கைக்கு வேகமாகத் திரும்பும் சென்னை! - CYCLONE FENGAL LIVE UPDATES
Published : Nov 30, 2024, 6:50 AM IST
வங்கக் கடலில் நவம்பர் 24 அன்று இலங்கைக்குத் தென்கிழக்கே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ‘ஃபெஞ்சல்’ புயலாக மாறி வலுபெற்றது. இதனால், சென்னை உள்பட சுற்றுவட்டார கடலோர மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கபப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோமீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோமீட்டர் தொலைவிலும் ‘ஃபெஞ்சல்’ புயல் மையம் கொண்டுள்ளது. இன்று நண்பகல் காரைக்கால் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு மிக அருகில் கரையை கடக்கிறது.
அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக அதிகளவு மேக கூட்டங்கள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படுவதால், தற்போதே காற்றுடன் கூடிய அதிக மழை பெய்ய தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்று 90 கிமீ வேகம் வரை வீசும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்போதே காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு:
- மாநில உதவி எண் : 1070
- வாட்ஸ் ஆப்: 944869848
- சென்னை மாநகராட்சி உதவி எண் : 1913
- திமுக வார் ரூம்: 8069446900
LIVE FEED
மிதமாகக் கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்
பழவேற்காடு ஏரி அருகே உள்ள மீனவ கிராமத்தில் மூழ்கிய படகுகள்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியை ஒட்டி அமைந்துள்ள ஜமீலாபாத் மீனவ கிராமத்தில் பழவேற்காடு ஏரி கரை பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து 50க்கும் மேற்பட்ட படகுகள், கட்டுமரங்கள் மற்றும் வலைகள் மூழ்கியதாகவும், தற்போது மூழ்கிய படகுகளை மீனவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கரைக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கம்பியை மிதித்து உயிரிழந்தவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி..!
சென்னை, வேளச்சேரி விஜயநகரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த வி.சக்திவேல் என்பவரது குடும்பத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்தோடு, ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
"பொதுமக்கள் தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்கவும்" - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் 183 நபர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகராட்சியில் மொத்தமாக உள்ள 329 பாதுகாப்பு முகாம்களில் தற்போது வரையில் சுமார் 183 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கரையைக் கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல்..!
ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கடந்து, மத்திய (கண் பகுதி) பகுதி கரையை நெருங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு..!
புயல் காரணமாக இன்று (நவ.30) வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை அனுமதிக்காமல் விடுமுறை விடப்பட்ட நிலையில், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாளையும் (டிச.01) வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்" - அமைச்சர் தாமு அன்பரசன் அறிவுறுத்தல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிக கனமழை மற்றும் பலத்த காற்று வீச உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமு அன்பரசன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூரில் உள்ள 23புயல் காப்பகம் மையங்களில் 827 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மாவட்ட ஆட்சியர் தகவல்!
திருவள்ளூர் மாவட்டத்தில் 23புயல் காப்பகம் மையங்களில் இதுவரை 827 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் தொடர்ந்து தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக புயல் பாதுகாப்பு மையங்களுக்கு வர வேண்டும் என்றும், காற்று அதிகமாக வீசப்படும் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் இடங்களில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
"சுற்றுலா தளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்" - கோவை ஆட்சியர் வேண்டுகோள்!
டிசம்பர் 01ஆம் தேதி முதல் 03ஆம் தேதி வரை வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மக்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு..
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077 மற்றும் 0422306051 என்ற கட்டணம் இல்லாத தொலைப்பேசி கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடப்படுவதாக அறிவிப்பு..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி இன்று (நவ.30) மதியம் 12:30 மணியிலிருந்து மாலை 7 மணி வரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலைய ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகரும் புயல்..!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரத்தின் தென் கிழக்கில் 50 கிமீ தொலைவிலும், புதுச்சேரியின் கிழக்கு வட கிழக்கே 80 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே தென் கிழக்கே 90 கிமீ தொலைவில் நகர்ந்து வருகிறது. புயல் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!
புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், சென்னை மண்ணடி பிரகாசம் சாலை முத்தியால்பேட்டையில் ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"ரெட் அலர்ட் உள்ள ஏழு மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை (டிச.01) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மின் நுகர்வோர் சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!
பெஞ்சல் புயல் இன்று (30.11.2024) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இப்புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் பொது மக்களுக்கான மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அம்மா உணவகங்களில் இலவச உணவு - தமிழக அரசு
கனமழை காரணமாக சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இன்று ஒரு நாள் மட்டும் இலவச உணவு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
- ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மழை நீர் சிக்கிய ஆட்டோவுக்கு உதவிய அரசு பேருந்து ஓட்டுநர்
சென்னை தி.நகரில் மழை நீரில் செல்ல முடியாமல் தவித்த ஆட்டோவை பேருந்தை வைத்து தள்ளி உதவிய அரசு பேருந்து ஓட்டுநர். வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல்.
கூவம் ஆற்றில் வெள்ளம்!
சென்னை மதுரவாயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் மதுரவாயல் மற்றும் நொளம்பூர் இடையே ஓடும் கூவம் ஆற்றைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. கூவமாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில் மூன்று அடிக்கும் மேல் வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் பாலத்தின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருபுறமும் பேரிகேட்கள் மற்றும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கால்நடைகள் அல்லது மக்கள் யாரேனும் தரைப்பாலத்தை கடந்து செல்லாதவாறு மதுரவாயில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் கரையை கடப்பதில் தாமதம்? - பிரதீப் ஜான்
மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் நாளைதான் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக தயாராகும் மதிய உணவு!
வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 13 வார்டு 176-ல் உள்ள மக்களுக்கு இன்று மதிய உணவு தயாரிக்கப்படுகிறது.
தயார் நிலையில் வார் ரூம்.. உதவி எண் அறிவிப்பு!
"ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முழு வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. நேற்றிரவு முதல் மழை பெய்தாலும், இதுவரையிலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனினும் மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவுப்படி திமுக தலைமைக்கழகத்தில் வார் ரூம் தயார் நிலையில் உள்ளது. உதவிகள் தேவைப்படுகிறவர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம்" - திமுக
- மாநில உதவி எண் : 1070
- வாட்ஸ் ஆப்: 944869848
- சென்னை மாநகராட்சி உதவி எண் : 1913
- திமுக வார் ரூம்: 8069446900
இன்று இரவு கரையை கடக்கும் புயல்!
புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநில அவசரகால செயல்பட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு அங்கு இருக்கக்கூடிய கள நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், "இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தண்ணீரில் மூழ்கிய ஐய்யப்பன்தாங்கல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் போரூர் அடுத்த ஐய்யப்பன்தாங்கல் பேருந்து பணிமனை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பேருந்துகள் பாதி மூழ்கிய படி செல்கின்றன. அத்துடன் பணிமனைக்குள் செல்ல முடியாமலும் பேருந்தில் பயணிக்க முடியாமலும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கனமழையானது இரவு வரை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐய்யப்பன்தாங்கல் பணிமனை மேலும் மோசமான நிலையை அடையும் என தெரிய வருகிறது.
அதேபோல், பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது. அதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் பயணிக்கின்றனர். கனமழையானது புயல் காரணமாக இரவு வரை நீடிக்கும் என்பதால், தண்ணீர் தேங்கும் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!
ஃபெஞ்சல் புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையம் இன்று மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மூடப்பட்டது சென்னை விமான நிலையம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை
மின் விநியோகம் நிறுத்தம்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் நிறுத்தம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு ரெட் அலர்ட்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னைக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனால், சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். மேலும், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சென்னை பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ வாகன நிறுத்தத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இன்று (நவ.30) நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள் மாயம்!
தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆறு மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்து தரும்படி தமிழக அரசுக்கு திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க:கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள் மாயம்; ஹெலிகாப்டர் மூலம் மீட்க கோரிக்கை!
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) இன்று கரையைக் கடக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:கரையைக் நெருங்கும் ஃபெஞ்சல் புயல்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!