கடலூர்:நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீஷ், முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான சி.வி.சண்முகம் மற்றும் தேமுதிக அதிமுக கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சிவக்கொழுந்து, “அதிமுக தேமுதிக கூட்டணி தேனும் பாலும் கலந்த கூட்டணி” என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், எல்லோராலும் மதிக்கப்படும் எளிமையான மனிதராக இருக்கும் சிவக்கொழுந்து நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தெரிவித்தார.
மேலும் பாமக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் மக்கள் நலனும் சமுதாய நலனும் அல்லாத கூட்டணி என விமர்சனம் செய்தார். தொடர்ந்து 10 ஆண்டு கால ஆட்சியில் மத்திய பாஜக அரசு செய்தது என்ன எனவும், நிர்வாகத் திறனற்ற, ஆள தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின், தன்னைத்தானே சிறந்த முதலமைச்சர் என கூறிக் கொள்கிறார் என விமர்சனம் செய்தார்.
மேலும் கஞ்சா விற்பது,பாலியல் வன்கொடுமை, விலைவாசி உயர்வு என அனைத்திலும் திமுக நம்பர் ஒன் ஆக உள்ளதாக குறிப்பிட்டார். முன்னதாக கூட்டத்தில் வேட்பாளர் சிவக்கொழுந்து ஆதரித்து பேசிய பொழுது, அவருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார். அப்போது, மேடையில் இருந்தவர்கள் செய்வது அறியாது பார்த்து கொண்டிருந்தனர்.
பின்னர், அருகில் இருந்த நிர்வாகி ஒருவர் அவரிடம் சின்னம் குறித்து தெரிவித்த பொழுது சுதாரித்துக் கொண்ட சி.வி.சண்முகம், என்னை மன்னித்து விடுங்கள், தவறாக சொல்லிவிட்டேன். டி.வி பார்த்து கொண்டு இருந்தேன், அதில் உச்சநீதிமன்றத்தில் ஒரு கட்சிக்கு அடிமேல் அடி விழுந்தது, அதே ஞாபகத்தில் சொல்லிவிட்டேன்” என கூறினார். பின்னர், வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
இதையும் படிங்க:"இரு தினங்களில் சின்னம் குறித்து அறிவிக்கப்படும்" - மதிமுக வேட்பாளர் துரை வைகோ விளக்கம்..! - Durai Vaiko About MDMK Symbol