தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“என்னால் மன்னிப்பு கூற முடியாது” - கோவை அதிமுக வேட்பாளரின் தந்தை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்! - Annamalai nomination filing

Annamalai Nomination filing: “பாஜகவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதைப் பார்த்த அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து வருகிறது” என கோவையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுதாக்கல் செய்த அண்ணாமலை பேச்சு
வேட்பு மனுதாக்கல் செய்த அண்ணாமலை பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 7:31 PM IST

கோயம்புத்தூர்: பாஜக வேட்பாளர் அண்ணாமலை, இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுமக்களின் பேராதரவு மற்றும் அன்போடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக வேட்பு மனு கொடுத்துள்ளோம். பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்கிற நம்பிக்கை உள்ளது.

அதில் கோயம்புத்தூர் மக்களின் குரலாக பாஜகவின் குரல் இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். கடந்த 10 நாட்களாக கோயம்புத்தூர் மக்களின் அன்பை ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பார்த்து வருகிறேன். கோயம்புத்தூரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒளிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் இருந்து குரல் இல்லை என்றாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மக்கள் பாஜகவிற்கு சட்டமன்ற உறுப்பினரை அன்பளிப்பாக அளித்தனர். இப்போது ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் மோடிக்கு அன்பளிப்பாக கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம்.

அதிமுக வேட்பாளர் தந்தை குறித்த கருத்துக்கு மன்னிப்பு கூற முடியாது, அது என்னுடைய கருத்து. வேட்பாளரோடு எனக்கு போட்டியல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி. பாஜகவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதை பார்த்த அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து வருகிறது.

கோவையின் ஜவுளித்துறை மற்றும் தொழில் துறையினரின் குரலாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எத்தனை முறை பேசியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும். ஆனால், நாங்கள் கட்சி ரீதியாக கோவையின் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக முயற்சிகளை முன்னெடுத்து சலுகைகளை பெற்றுத் தந்துள்ளோம்.

குறிப்பாக, விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய அமைச்சர், முதலமைச்சருக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார். சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மூன்று முறை விமான நிலைய விரிவாக்கம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் முயற்சியில் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கோயம்புத்தூருக்கு வந்து தொழில்துறையினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவை என்பதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். கோவையின் காவல் தெய்வமாக உள்ள கோனியம்மன் கோயிலில் வழிபாடு செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற வேண்டும் என வேண்டவில்லை. மக்கள் நலனுக்காக மட்டுமே கோனியம்மன் கோயிலில் வழிபாடு செய்தேன். 2002ஆம் ஆண்டு பொறியியல் படிப்பிற்காக கோவைக்கு வந்தேன், திருமணம் செய்து இங்கு தான் வசித்து வருகிறேன்.

அதிமுக, திமுக இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் பயம் வந்துவிட்டது என்பதை அவர்களது பேச்சுக்கள் காட்டுகின்றன. 1998 கோவை குண்டுவெடிப்பை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தவர், 2022ஆம் ஆண்டு கோவையில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு முயற்சியிலிருந்து நாம் தப்பித்தோம். இந்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். என்.ஐ.ஏ காவல் நிலையம் கோவையில் வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிறித்தவம் மற்றும் முஸ்லிம் மத குருமார்களை நேரடியாகச் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறோம். அவர்களின் ஆதரவும் எங்களுக்கு உண்டு. சிறுபான்மையினர் பெரும்பான்மை என்கிற வார்த்தைகளை பயன்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அனைவரையும் கோவையின் மக்களாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். ஜான்பாண்டியன் மீதான வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அவரவர் மீதான சட்ட வழக்குகளுக்கு அவர்கள் தான் பொறுப்பு" என பதில் அளித்தார்.

இதையும் படிங்க:“நான் விநாயகர்.. நீங்கள் முருகன்” - பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு! - Annamalai Slams MK Stalin

ABOUT THE AUTHOR

...view details