சென்னை: தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருக்கும் வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ப்ராட்சர் பிரைவேட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2013ம் ஆண்டு விண்ணப்பித்தது.
ஆனால், அந்த திட்டத்துக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2016ம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்குவதற்கு பெருமளவு லஞ்சம், அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக அந்த இயக்கம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழங்கிய புகாரில், "ஸ்ரீராம் நிறுவனம் அங்கு குடியிருப்பு கட்ட திட்ட அனுமதிக்காக வைத்திலிங்கத்துக்கு ரூ.27.9 கோடி லஞ்சமாக வழங்கியுள்ளது. லஞ்ச பணம் பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட் மூலம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குநர்களாக இருந்த முத்தம்மாள் எஸ்டேட் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு.. காரணம் என்ன?
ஆனால் முத்தம்மாள் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பாரத் நிறுவனம், தாங்கள் வாங்கிய ரூ.280 கோடி கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தங்களுடைய சொத்துக்களை விற்று அடைப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேலும், வேறு சில தனியார் நிறுவனங்கள் வணிகத்துக்காக பாரத் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது போல ரூ.27.9 கோடி கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பெற்ற முத்தம்மாள் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வணிகம் செய்யவில்லை என வருமானவரித் துறையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உண்மை நிலைமை இப்படி இருக்கையில், தங்களுக்கு கிடைத்த லஞ்ச பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சிராப்பள்ளி பாப்பகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.
இதேபோல லஞ்ச பணம் கிடைத்த காலக்கட்டத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடுத்தடுத்து வாங்கியுள்ளனர். எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
அந்த விசாரணையில் அறப்போர் இயக்கத்தின் புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, உறவினர் பன்னீர்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், பாரத் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கையும் பதிவு செய்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து வைத்திலிங்கம் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.