மயிலாடுதுறை:குத்தாலம் அருகே ஆலங்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 17ஆம் தேதி காணும் பொங்கல் அன்று, ஊர் சார்பில் தமிழ்செல்வன் உள்ளிட்ட இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உள்ளனர்.
அப்போது ஊர் வரி வைத்து விஷேசம் நடத்தவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், ஊர் நாட்டாமையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரேடியோ போட்டால் தகராறு வரும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கட்டை, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தமிழ்செல்வன் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்செல்வன் தரப்பைச் சேர்ந்த தாஸ், செல்வபிரகாஷ், ஜெய்காந்த், ஜெயகுமார், மோகன், கலைவேந்தன் ஆகியோர் மீதும், ராமச்சந்திரன் தரப்பைச் சேர்ந்த நவகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கரிகாலன், சரத்குமார், பாலா உள்ளிட்ட இரு தரப்பினர் மீதும் குத்தாலம் போலீசார் 147, 294 (b), 324, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.