வயநாடு:கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், அப்பகுதியில் உள்ள பல வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் (ஜூலை 30) அதிகாலையில், வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலியாகியுள்ளனர். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மீட்புப்பணிக்காக அப்பகுதியில் தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து, சுமார் 150 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த கோரச்சம்பவத்தில், இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த பேரிடரில் தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது வரை உயிரிழந்தவர்களில் 54 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாகவும், அதில் 52 பேரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவத்தினர், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு பகலாக தொடர்ந்து வரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இரண்டாம் நாளான இன்றும் (ஜூலை 31) மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேப்பாடி பகுதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்கள், ராணுவ மருத்துவ வாகனம், ஏராளமான தன்னார்வலர்கள், கிரேன், உட்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.