ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் கடந்த நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. 2025 ஐபிஎல் ஏலத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போய் வரலாறு படைத்தார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும், வெங்கடேஷ் ஐயரை 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. இப்படி ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 120 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வீரர்களை ஏலத்தில் எடுத்தன.
ஒரு அணியில் குறைந்தபட்சம் 18 வீரர்கள் முதல் அதிகபட்சம் 25 வீரர்கள் வரை வைத்துக் கொள்ள ஐபிஎல் விதி அனுமதிக்கிறது. அந்த வகையில் நடந்து முடிந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அனுமதிக்கப்பட்ட 25 வீரர்களை கொண்டுள்ளன.
அதேநேரம், குறைந்தபட்சமாக சன்ரைசஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மட்டும் தலா 20 வீரர்களை கொண்டுள்ளன. அதேபோல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் 5 லட்ச ரூபாயை மீதம் வைத்துள்ளன.
அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் 75 லட்ச ரூபாய் மீதம் வைத்துள்ளது. இந்நிலையில், ஏலம் முடிந்த பின், மீதமாகும் தொகையை அணிகள் என்ன செய்யும் என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். ஐபிஎல் விதிகளின் படி, ஏலத்திற்கு பின் மீதம் உள்ள தொகையை கொண்டு ஒர் அணியில் இருந்து காயம் அல்லது வேறெதும் காரணங்களுக்காக விலகும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகிறது.
அதேநேரம், புதிதாக அணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர் ஐபிஎல் ஏலத்தில் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருக்க வேண்டும். மேலும், ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறும் வீரர் வாங்கும் ஊதியம் அல்லது அதைவிட குறைந்த ஊதியம் வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், கேன் வில்லியம்சன், மயங்க் அகர்வால், ஜானி பேர்ஸ்டோவ், உமேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு மறு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த அணியிடம் எவ்வளவு தொகை மீதமுள்ளது:
- சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.5 லட்சம்,
- டெல்லி கேபிட்டல்ஸ் - ரூ.20 லட்சம்,
- குஜராத் டைட்டன்ஸ் - ரூ.15 லட்சம்,
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.5 லட்சம்,
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ.10 லட்சம்,
- மும்பை இந்தியன்ஸ் - ரூ.20 லட்சம்,
- பஞ்சாப் கிங்ஸ் - ரூ.35 லட்சம்,
- சன்ரைசஸ் ஐதராபாத் - ரூ.20 லட்சம்,
- ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு - ரூ75 லட்சம்.
இதையும் படிங்க:சொல்லி அடித்த பும்ரா.. மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை!