சென்னை: விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், புழல் சிறையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா, சிறையில் உள்ள இந்திய கைதிகள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படும் நிலையில், டிசம்பர் முதல் வெளிநாட்டு கைதிகள் அவர்களது குடும்பத்துடன் பேச அனுமதிக்கப்படவில்லை. மனுதாரர் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 75 கைதிகள் சிறையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: "ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" -பரந்தூர் பகுதி மக்கள் உறுதி!
சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், சிறை கைதிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்திய கைதிகளை போல வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடர்பாக எந்த விதிகளும் இல்லாததால், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை இணைத்து உத்தரவிட்டனர். மற்ற மாநிலச் சிறைகளில் வெளிநாட்டு கைதிகளுக்கான விதிமுறைகள் நடைமுறையில் இருந்தால் அதனை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.