திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் நடந்த அகில இந்திய அளவிலான பெண்கள் கபடிப் போட்டியில் உலகக் கோப்பை வீராங்கனைகளுக்கே டப் கொடுத்த நெல்லை சிங்க பெண்கள், இறுதி வரை போராடித் தோற்ற அணியை கௌரவிக்க, வெற்றி பெற்ற அணி பரிசுத் தொகை மற்றும் தங்க நாணயத்தைக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் அகில இந்திய அளவிலான பெண்கள் கபடிப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், டில்லி, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 16 அணிகள் பங்கேற்றன. மேலும், போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜன.16) இரவு நடந்த கால் இறுதிச்சுற்றில் இந்திய ரயில்வே அணியும், நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பாரதி அணியும் மோதின. ரயில்வே அணியைப் பொறுத்தவரை உலகப் போட்டியில் வெற்றி பெற்று சமீபத்தில் மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற ரித்து நெகி உள்பட மிகத் திறமை வாய்ந்த வீரர்கள் களமிறங்கினர்.
அதே சமயம் எதிரணியான பாரதி அணியில் நெல்லை மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து மிக எளிமையான முறையில் பயிற்சி பெற்று, அதேசமயம் வெறி கொண்ட மண்ணின் மைந்தர்களான இளம் வீராங்கனைகள் களமிறங்கினர். பாரதி அணி ஏற்கனவே தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், ரயில்வே அணிக்கு பாரதி அணியைச் சேர்ந்த இளம் வீராங்கனைகள் மிகவும் டப் கொடுத்து விளையாடினர்.
இதையும் படிங்க: ஒரு கிலோ பன்னீரை விட குறைவு.. பாக்.,கில் சாம்பியன்ஸ் கோப்பை டிக்கெட் விலை எவ்வளோ தெரியுமா?
இதன் காரணமாக போட்டி கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியாக ஒரே ஒரு புள்ளி (19-18) வித்தியாசத்தில் ரயில்வே அணி வெற்றி பெற்றது. அதேசமயம், கடைசி வரை பாரதி அணி வீராங்கனைகள் டப் கொடுத்து விளையாடினர். அதாவது, அதிகளவு புள்ளி வித்தியாசம் வராத வகையில், மிகக் கடுமையாக டப் கொடுத்தனர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற இந்திய ரயில்வே அணிக்கு தங்க நாணயம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
இந்த பரிசுகளைப் பெற்ற இந்திய ரயில்வே அணியின் கேப்டனும், அர்ஜுனா விருது பெற்றவருமான ரித்து நெகி பாரதி அணி வீரர்களின் அபார திறமையைக் கௌரவிக்கும் விதமாக தாங்கள் வாங்கிய தங்க நாணயம் மற்றும் ரூ.10,000 பரிசுத் தொகையை பாரதி அணி வீராங்கனைகளுக்கு கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி, வளரும் வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஹரியும், பாரதி அணி வீராங்கனைகளின் திறமையைக் கண்டு வியந்து அவர்களுக்கு ரூ.5000 பரிசளித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்திய ரயில்வே அணி வெற்றி பெற்று முதல் பரிசைத் தட்டிச் சென்றது. முதல் பரிசாக ரூ.1.50 லட்சம் பணம் மற்றும் ஸ்கூட்டி பைக் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.