ஐதராபாத்:2005 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு எப்போது?:
அந்த வகையில் இந்திய வீரர்களில் அதிகபட்ச தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக விராட் கோலி சாதனை படைத்தார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பெங்களூரு அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள விராட் கோலிக்கு 21 கோடி ரூபாய்க்கு சம்பளமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் பெங்களூரு அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலிக்கு தற்போது 35 வயதை எட்டியுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் விரைவில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஆண்டுகள் நிறைவு:
ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் எவ்வளவு நாட்கள் விளையாடுவார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் பெங்களூரு அணி சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் தனது ஓய்வு குறித்த முடிவை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் விராட் கோலி, "அடுத்த மெகா ஏலம் வருவதற்கு முன்னதாக நான் ஆர்சிபி அணியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து விடுவேன்.
அதனை நினைக்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என்று ஐபிஎல் தொடர் துவங்கும் போது நினைக்கவில்லை. எனக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையிலான உறவு 17 ஆண்டுகளாக மிகவும் வலுவாக இருக்கிறது. எனக்கு ஆர்சிபி அணியை தவிர்த்து வேறு எந்த அணிக்கும் விளையாட விருப்பமில்லை. இதுவரை நான் ஆர்சிபி அணிக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நிச்சயம் ஒரு முறையாவது ஆர்சிபி அணிக்காக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்பதை மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:WTC Rankings: இந்தியாவுக்கு கடும் பின்னடைவு? இறுதிப் போட்டிக்கு நுழையுமா?