சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, நாளை (பிப்ரவரி 26) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் சொகுசு விடுதியில் நடைபெற உள்ளது. தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்துக்கொள்வதற்காக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சி தொடங்கியபோது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தங்களது இலக்கு எனக்கூறிய விஜய், தற்போது அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதில், ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக-வின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் நாளை நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 500 நபர்கள் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கான பிரத்யேக பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மேடையில் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் (Jan Suraaj) தலைவருமான பிரஷாந்த் கிஷோர் இன்று சென்னை வந்தடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜயை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தவெக பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஆண்டு விழா நடைபெறும் இடத்தை கடந்த 21 ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார்.