சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் தொடர்புடைய மாணவருக்கு நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ந் தேதி முதல் ஏப்ரல் 15 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் பொதுத் தேர்வினை எழுத உள்ள மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுப்பட்டால் அதுகுறித்து கண்காணித்து அரசு தேர்வு துறைக்கு அளிக்க வேண்டிய அறிக்கை குறித்து பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுத்தாள் அல்லது அச்சடித்த குறிப்புகள் வைத்திருந்து அதை பார்த்து எழுதும்போது பிடிபட்டிருந்தால் தேர்வர் துண்டுத்தாள்களை பார்த்து விடைகளை விடைதாளில் எழுதும்போது பிடிக்கப்பட்டார் என தெளிவாக அறிக்கையில் குறிப்பிட வேண்டும். தேர்வர் துண்டுத்தாளில் இருந்து விடைத்தாளில் எழுதிய பகுதியை விடைத்தாளிலும், துண்டுத்தாளிலும் பச்சை, சிகப்பு நிற மையினால் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். தேர்வர் மற்றும் அறை கண்காணிப்பாளர் வாக்குமூலத்திலும் துண்டுத்தாளை பார்த்து விடைகள் எழுதும்போது பிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட வேண்டும்.
கடுமையான குற்றம்: விடைத்தாள் பரிமாற்றம் செய்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும். தேர்வர்களுக்குள் விடைத்தான் பரிமாற்றம் செய்து தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும்போது பிடிக்கப்பட்டால் எந்தத் தேர்வரின் விடைத்தாள் மாற்றம் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மாற்று விடைத்தாள் கொண்டு தேர்வெழுதியபோது கண்டுபிடிக்கப்பட்ட விடைத்தாள் மீது எந்த பதிவென் கொண்ட தேர்வரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு அறைக் கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலரும் மேலொப்பமிட வேண்டும்.
ஆன்மாறாட்டம் செய்தால் போலீசில் புகார்: பொதுத்தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும் ஒழுங்கீனச் செயல்கள் கண்டுபிடிக்கப்படும்போது காவல் துறையினருக்கு உடனடியாக தெரிவித்து வழக்குப்பதிவு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு முதல் தகவல் அறிக்கையின் நகலினை அனுப்புதல் வேண்டும். தேர்வரின் பதிவெண், பெயர், வீட்டு முகவரி, ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியவர் பெயர், வீட்டு முகவரி போன்ற தகவங்களுடன் விரிவான அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
தேர்வர் இதர ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும்போது. அவர்கள் ஈடுபட்ட ஒழுங்கீனச் செயல்கள் குறித்து விரிவாக அறிக்கை அனுப்புதல் வேண்டும். தேர்வர்களின் வாக்குமூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இருப்பின் (குறிப்பாக மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள்) அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரால் மேலொப்பமிட்டு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
எச்சரிக்கை விடுக்கப்படும்:தேர்வர்கள் தேர்வின்போது அச்சடித்தப் புத்தகங்கள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் தன் வசம் வைத்திருந்து தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தால், முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்படுவார். தேர்வர் இத்தவறினை அதே பருவத்தில் மீண்டும் செய்தால் அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்று வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத் தடையில்லை. இதன் விவரங்களை செயலாளர் மாநிலப் பள்ளி தேர்வுகள் குழுமம். சென்னை-6 என்ற முகவரிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் தெரிவிக்க வேண்டும்.
தேர்வர்கள் விடைத்தாளில் தவறான அல்லது புண்படுத்தும் வார்த்தைகளை எழுதினாலோ அல்லது மதிப்பெண்களை வழங்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டாளருக்கோ அல்லது அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கோ கடிதம் எழுதி இருந்தால், குறிப்பிட்ட பாடத் தேர்வு ரத்து செய்யப்படும். தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தேர்வறையில் அல்லது தேர்வறைக்கு வெளியில் தகாத வார்த்தைகளால் திட்டுதல் அல்லது தாக்குதில் ஈடுப்பட்டால், முதன்மைக் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தேர்வறையில் இருந்து மாணவர் வெளியேற்றப்படுவதுடன், பிற பாடத் தேர்வுகளும் எழுத தடை விதிக்கப்படுவார் அல்லது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத தடை அல்லது நிரந்தர தடை விதிக்கப்படும்.
வினாத்தாளை வெளியில் அனுப்பினால், தேர்வு ரத்துச் செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு அதாவது அடுத்த 6 பருவத் தேர்வுகளில் மாணவர் பங்கேற்க முடியாது என்பது உள்ளிட்ட 14 வகையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு தெளிவான அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.