மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மூன்று நாட்களுக்கு ஓவிய கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், நிரந்தர ஓவிய கண்காட்சி நடத்தும் வகையில் கண்காட்சிக் கூடம் அமைக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய வகுப்புகள் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் ஓவியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையில் உள்ள கலை பண்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பாக, நேற்று (பிப்ரவரி 24) முதல் நாளை (பிப்ரவரி 26) வரை மூன்று நாட்களுக்கு ஓவியம் (Painting exhibition) மற்றும் சிற்பக்கலை கண்காட்சி (Sculpture exhibition) காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின், 300க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அக்ரிலிக் பெயிண்ட்டிங் (acrylic painting),ஆயில் பெயிண்ட்டிங் (Oil painting), மெட்டல் மற்றும் கற்சிற்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறையின் துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஈடிவி பாரத் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “கலை பண்பாட்டுத் துறை சார்பாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கலைஞர்களின் படைப்புத் திறமையை மென்மேலும் வளர்க்கும் விதமாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. இவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கலை பண்பாட்டுத் துறை சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநில அளவில் 'கலைச்செம்மல்' விருதும் வழங்கப்படுகிறது. இந்த ஓவிய மற்றும் சிற்பக்கலைகளை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மற்றும் கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் கட்டட மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியும் இயங்கி வருகின்றன." என்று அவர் தெரிவித்தார்.
நிரந்தர ஓவிய கண்காட்சிக் கூடம்:
தொடர்ந்து, கண்காட்சி குறித்து ஓவியர் சுந்தரம் கூறுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்காட்சி நடத்துவதற்காக இந்த வளாகம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதில், மதுரையைச் சேர்ந்த ஓவியர்கள் பலர் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அரசு அலுவலர்கள் பார்வையிட்டு பாராட்டியுள்ளனர். இந்த வளாகத்திலேயே நிரந்தர ஓவிய கண்காட்சி நடத்தும் வகையில் கண்காட்சிக் கூடம் அமைக்க வேண்டும். வளரும் கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்த வேண்டும். ஓவியர்கள் கலையை வளர்க்கும் ஆர்வத்துடன் இயங்கி வருகின்றனர்." என்றார்.

ஓவியர் லீனா கூறுகையில், “இந்த ஓவிய கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும் நாங்கள் விருப்பமாக உள்ளோம். ஆனால், இங்கு போதுமான இடவசதிகள் இல்லை. எனவே, இந்த வளாகத்திலேயே நிரந்தர காட்சிக்கூடமும், ஓவிய வகுப்புகளும் நடத்த அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர், மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் கூறுகையில், “ஓவியக் கண்காட்சிகள் கலைஞர்களின் ஆக்கத்திறனை ஊக்குவிப்பதுடன், அவர்களது படைப்புகளை உலகிற்கு வெளிக்காட்ட நல்ல வாய்ப்பாகும். பொதுமக்கள் தங்களிடம் உள்ள அருமையான கலைப் பொக்கிஷங்களை அரசு அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு இதற்கென்று தனியாக சன்மானத் தொகையை வழங்கி வருகிறது.

கலை பயிற்சிகள்:
சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான செய்திகள், கலைப் பொருட்கள், தொல் பொருட்கள், செப்புப் பட்டயங்கள், வீடுகளில் உள்ள மிகப் பழமையான பொருட்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அந்தந்த மாவட்ட அரசு அருங்காட்சியகத்திடம் வழங்கலாம். இதற்கு சன்மானத் தொகையும் உண்டு.
தொடர்ந்து, இதுபோன்ற கண்காட்சிகள் அரசு அருங்காட்சியகம் சார்பாக நடைபெறும். வருகின்ற மே மாதத்தில் பல்வேறு கலைப்படைப்புகள் தொடர்பான பயிற்சிகள் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவியருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கலைப் பயிற்றுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.