கோயம்புத்தூர்: வால்பாறை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிங்கவால் குரங்கு குட்டி உயிரிழந்துள்ளது. ஆனால், தனது குட்டி உயிரிழந்ததை அறியாத தாய் குரங்கு குட்டியை சாலையில் தூக்கிக்கொண்டு சென்ற காட்சி பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு, வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல், கவியருவி, புதுlத்தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்குகள், சிங்கவால் குரங்கு, கருமந்தி ஆகியவை உள்ளது. குறிப்பாக புதுத்தோட்டம் வால்பாறை நுழைவாயில் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன.
எனவே, இவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து, வனப்பகுதியைவிட்டு அவை சாலைகளில் வராமல் இருக்க, ஆனைமலை புலிகள் காப்பகம் துணைக்கள இயக்குநர் பார்க்கவே தேஜா உத்தரவின் பேரில், வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது சொந்த செலவில் சிங்கவால் குரங்குகள் சாலைகளில் நடக்காத வண்ணம், மரங்களுக்கிடையில் ரப்பர் பாதை அமைத்துள்ளார். தொடர்ந்து, சிங்கவால் குரங்குகள் சாலைகளில் சென்று உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம், தினமும் இரண்டு தன்னார்வலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கண்காணித்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் தொடங்கியது கண்கவர் ஓவிய கண்காட்சி: ஓவியர்கள் அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? |
தற்போது, கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் சுற்றுலா வந்த பெயர் தெரியாத வாகனம் ஒன்று, புதுத்தோட்டம் பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிங்கவால் குரங்கு குட்டி மீது மோதியுள்ளது. இதில், குரங்கு குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. ஆனால், குட்டி உயிரிழந்ததை அறியாத தாய் குரங்கு தனது குட்டியை மார்போடு அணைத்துக் கொண்டு சாலையில் அலைந்து திரிந்துள்ளது. தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் வாகனத்தல் அதிக வேகத்துடன் வராமல் இருக்க வேண்டும். தற்போது வனவிலங்குகள் சாலைகளில் இடமாற்றம் அதிகம் உள்ளது. தற்போது சிங்கவால் குரங்கு குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என தெரிவித்துள்ளனர்.