கோயம்புத்தூர்: கோவையில் நாளை (பிப்.26) நடைபெறவுள்ள பாஜக புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மாலை ஈஷா யோகா மைய வளாகத்தில், மகா சிவராத்திரி விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.
இதற்காக இன்றிரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அமித் ஷாவை வரவேற்றனர்.
Arrived in Coimbatore (Tamil Nadu).
— Amit Shah (@AmitShah) February 25, 2025
Tomorrow, will attend the celebrations to be held at Isha Foundation on the sacred occasion of Maha Shivratri.
Eagerly waiting to meet the devotees from different parts of Bharat and the globe.
கோயம்புத்தூருக்கு (தமிழ்நாடு) வந்தடைந்தேன்.… pic.twitter.com/lhCAZFLVaJ
தமிழ் மணக்க வரவேற்ற பாஜகவினர்:
அப்போது அமித் ஷாவை வரவேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அணிவித்த மாலையில் "தமிழ் வாழ்க" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதுபோல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அணிவித்த சால்வையில் தமிழ் எழுத்துகள் இடம் பெற்றிருந்தன.
தொடர்ந்து, தமிழிசை செளந்தரராஜன் அளித்த திருக்குறள் விளக்க உரை புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே இருந்தன. மேலும், நயினார் நாகேந்திரன் தமிழ் பண்பாட்டு ஓவிய புத்தகத்தையும் அமித்ஷாவிடம் வழங்கினார்.
On behalf of @BJP4TamilNadu & along with our Senior leaders, delighted to welcome our Hon Home & Co-operation Minister Thiru @AmitShah avl on his arrival in Coimbatore today.
— K.Annamalai (@annamalai_k) February 25, 2025
The Hon Minister was presented with a garland engraved with Tamil letters, a shawl praising the richness… pic.twitter.com/OswF6pu9UL
தொண்டர்கள் உற்சாக வரவேற்பு:
விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள், அமித் ஷாவின் கார் மீது மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, அமித் ஷா அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டு சென்றார். இன்றும், நாளையும் கோவையில் இருக்கும் உள்துறை அமைச்சரை பல்வேறு தொழில் துறையினர் சந்தித்து பேச உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது வருகையையொட்டி கோவையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருப்பு கொடி போராட்டம்:
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை கண்டித்தும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காந்தி பார்க் பகுதியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.