லாகூர்: கோரசன் மாகாணத்தின் இஸ்லாமிக் ஸ்டேட் (ISKP) என்ற அமைப்பினர் ஐசிசி சான்பியன்ஸ் கோப்பை போட்டியை காணவரும் வெளிநாட்டவர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் இதற்கு முன்பு 1996ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தியது. இதன் பின்னர் இப்போது தான் ஐசிசி கிரிக்கெட்போட்டிகளை பாகிஸ்தான் தனியாக நடத்துகிறது. லாகூரில் ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்துக்குப் பதில் இந்தியாவின் தேசியகீதம் பாடப்பட்டது, கராச்சியில் தென் ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியின் போது கருப்புப்பூனை ஒன்று மைதானத்தை சுற்றி வந்தது என இந்த நிகழ்வுகள் பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த காலங்களில் வெளிநாட்டவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. சீன பொறியாளர்கள் மீது கடந்த ஆண்டு நடந்த தாக்குதல்கள், லாகூரில் 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் குழுவினர் மீது நடந் தாக்குதல் அந்த நாட்டின் பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்தன.
இதையும் படிங்க: கோலி சதம்.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா... ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
இந்த நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, கோரசன் மாகாணத்தின் இஸ்லாமிக் ஸ்டேட் (ISKP) என்ற அமைப்பு முக்கிய நகரில் உள்ள புறநகர் பகுதிகளில் அவ்வளவு எளிதாக யாரும் கண்டுபிடிக்காத பகுதிகளில் சில வீடுகளை வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அந்த பகுதிகளில், கிரிக்கெட் போட்டிகளை காணவரும் வெளிநாட்டவர்களை கடத்தி வந்து பிணையக் கைதிகளாக வைத்திருக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை காணவரும் சீனா, அரபு நாடுகளை சேர்ந்தவர்களை கடத்த அவர்கள் தி்ட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் உளவுத்துறை முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்பு முக்கியமான இடங்களில் தா்க்குதல் நடத்தக் கூடும் என்று கூறியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐஎஸ்கேபி என்ற அந்த அமைப்பு வெளியிட்டிருந்த வீடியோ செய்தியில், இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவுப்பூ்வமான போராக கிரிக்கெட்டை மேற்குலக நாடுகள் கருவியாக உபயோகிக்கின்றன. விளையாட்டுகள் தேசியவாதத்தை கொள்கையாகக் கொண்டுள்ளன. இது இஸ்லாமியின் ஜிகாத் கொள்கைக்கு எதிரானதாகும்," என்று கூறப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரிக்கும் தாலிபான் அமைப்பையும் இந்த அமைப்பு விமர்சித்துள்ளது.