டெல்லி:தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய ரயில்வே பணியில் இருந்து விலகுவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த விளையாட்டில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், குறிப்பிட்ட எடையை விட 100 கிராம் கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து சர்வதேச விளையாட்டுக்காக நடுவர் மன்றத்தில் தகுதி நீக்கத்தை எதிர்த்து முறையிட்ட வினேஷ் போகத்தின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் பாரீஸ் ஒலிம்பிக்சில் பதக்க வாய்ப்பை இழந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெறுங்கையுடன் நாடு திரும்பினார். இருப்பினும், அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சொந்த கிராமம் வரை மக்கள் வழிநெடுக காத்திருந்து வரவேற்றனர்.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அதையடுத்து இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும், அரசியலில் குதிக்கப் போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன.