நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பங்கேற்கிறார். காயம் காரணமாக இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. இதனால் அவருக்கு பதிலாக முகமது ஷமி அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றதன் மூலம் 14 மாத இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு முகமது ஷமி திரும்பினார். தற்போது இந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் ஷமிக்கு இந்த தொடர் மிக முக்கிய வாய்ந்ததாக இருக்கும். மேலும், இந்திய அணியின் பந்து வீச்சு குழுவுக்கு ஷமி தலைமை தங்குவார் எனவும் கூறப்படுகிறது.
5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை!
இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கும் முகமது ஷமிக்கு மற்றொரு சாதனையும் காத்திருக்கிறது. ஒருநாள் தொடரில் 200 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை சமன் செய்ய ஷமிக்கு ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே தேவை. மிட்செல் ஸ்டார்க் 102 ஒருநாள் போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்திய பவுலர் ஷமி 101 ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், வருகிற தொடரில் முதல் போட்டியில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை சமன் செய்து ஒருநாள் தொடரில் 200 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பெறுவார்.
If Mohammed Shami takes a 5-wicket haul in his upcoming ODI, he will become the joint fastest to reach 200 ODI wickets,alongside Mitchell Starc.
— Abba's Notebook (@AbbasNotebook) February 4, 2025
Fastest to 200 ODI wickets (by matches)
102 matches :🇦🇺 Mitchell Starc
104 matches :🇵🇰 Saqlain Mushtaq
107 matches :🇳🇿 Trent Boult. pic.twitter.com/YQ3bYbNEJ6
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
- மிட்செல் ஸ்டார்க்: 102 போட்டிகளில் 200 விக்கெட்டுகள்.
- சக்லைன் முஷ்டாக்: 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகள்.
- டிரென்ட் போல்ட்: 107 போட்டிகளில் 200 விக்கெட்டுகள்.
- பிரட் லீ: 112 போட்டிகளில் 200 விக்கெட்டுகள்.
- ஆலன் டொனால்ட்: 117 போட்டிகளில் 200 விக்கெட்டுகள்.
2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக விளையாடிய ஷமி ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். பிப்ரவரி 2024 இல் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு காயத்தில் இருந்து குணமாகி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
முகமது ஷமி சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 மற்றும் 50 ஓவர் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்கு முன்பு ஷமி ரஞ்சி டிராபியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.