டெல்லி : கெடு விதிக்கப்பட்ட காலத்திற்குள் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்காத காரணத்திற்காக இந்திய பாராலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்து மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிப்பட்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இயங்கி வருகிறது இந்திய பாராலிம்பிக் கமிட்டி. தேர்தல் மூலம் பாராலிம்பிக் கமிட்டி நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்படும் கமிட்டியின் ஆயுட்காலம் என்பது 4 ஆண்டுகள் ஆகும்.
கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு சட்ட பிரச்சினைகளால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியுடன் பழைய உறுப்பினர் கமிட்டியின் பொறுப்பு காலம் நிறைவு பெற்ற போதிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.