சென்னை:சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பத்தாவது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் டேபிள் டென்னிஸ், தடகளம் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பூட்டான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
3 பதக்கம்:இந்த போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சார்ந்த ஹரிஹரன் என்பவர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 75 கிலோ எடைப் பிரிவில் குமித்தே பிரிவில் தங்கப்பதக்கமும், கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இவர் முன்னாள் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் கமலக்கண்ணனின் மகன் ஆவார்.
அதேபோல் மதுரையைச் சேர்ந்த நரசிம்மன் என்ற மாணவன் மலேசியாவில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 14 வயது உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து பதக்கம் வென்று சென்னை திரும்பிய இருவருக்கும் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு (Credits - ETV Bharat Tamilnadu) இதையும் படிங்க:ரூபிக் கியூப்பில் கின்னஸ் சாதனை! அசத்தும் மாணவர்!
கராத்தே வீரர்:இது குறித்து கராத்தே வீரர் கமலக்கண்ணன் கூறுகையில்,"சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கரத்தை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளேன். இந்த தொடரில் பிலிப்பைன்ஸ் உடனான போட்டியில் மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் போராடி வெற்றி பெற்றேன்.
சிறு வயதிலிருந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் பெற்றோர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதக்கங்களை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன் அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்று கரத்தே போட்டியில் பங்கேற்பதற்கு உதவி செய்து வரும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேசிய தடகள போட்டியில் 6 தங்கப்பதக்கம் வென்ற திருச்சி மாணவிகள்.. ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
முதல் சர்வதேச போட்டி:இதையடுத்து டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நரசிம்மனின் பயிற்சியாளர் சுப்பிரமணியன் கூறுகையில்,"நான்கு வருடங்களாக நரசிம்மன் பயிற்சி பெற்று வருகிறார். இவர் பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இந்த தொடரில் கொரியன் மற்றும் மலேசியா நாட்டு வீரர்களுடன் போட்டி சற்று கடினமாக இருந்தது.
இருந்தபோதிலும் மாணவன் (நரசிம்மன்) சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். வரும் காலங்களில் நடைபெறும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று அடுத்தடுத்து பதக்கங்களை குவிப்போம், இதற்காக தொடர்ந்து பயிற்சியில் நரசிம்மன் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவில் டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது. விரைவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற உள்ளோம்" என தெரிவித்தார்.