சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் (Chennai Open ATP Challenger) ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன் போட்டி ஒற்றையர் பிரிவில், ஸ்வீடன் வீரரை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார் பிரான்ஸ் நாட்டு வீரர் கைரியன் ஜாக்கட். மேலும், சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் வீரர் கைரியனுக்கு ரூ.20 லட்சமும், 100 சர்வதேச புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 (ATP100) ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2025, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா, செக் குடியரசு, கிரேட் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, குரோஷியா, ஜப்பான், ஹாங்காங், கஜகஸ்தான், கனடா, உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின், ஹங்கேரி, பிரான்ஸ், இத்தாலி, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றனர்.
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்-யின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலக தரவரிசை பட்டியலில் 273-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கட் மற்றும் உலக தரவரிசை பட்டியலில் 322-வது இடத்தில் உள்ள ஸ்வீடன் வீரர் ஏலியஸ் யமர் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.
இதையும் படிங்க: IND VS ENG: ரோஹித்,கில் அதிரடி ஆட்டத்தில் ஆடிப்போன இங்கிலாந்து! இந்தியா அபார வெற்றி
இதில், பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கட் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வீடன் வீரர் ஏலியஸ் யமரை வீழ்த்தி சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் வீரர் கைரியனுக்கு 20 லட்சம் ரூபாயும், 100 சர்வதேச புள்ளிகளும் வழங்கப்பட்டது.
![கோப்பையை வென்ற பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/tn-che-chennaiopentennisfinal_09022025193047_0902f_1739109647_572.jpg)
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் சென்சுரி (100) இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கினார். இந்த நிகழ்வில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவட்சவா, தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்த்தராஜ் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.