தஞ்சாவூர்: கும்பகோணம் விடுதலை தமிழ் புலிகள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நேற்று (பிப்.11) மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "பெரியாரை அவமதிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் அவர் குறித்த கட்டுக்கதைகளைச் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியை, பெரியார் மண்ணான, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அங்கு விடுதலை தமிழ் புலிகள் கட்சி வேட்பாளர் வெண்ணிலா, பெரியார் பெருந்தொண்டர்கள் தமிழ் தேசிய பேரியக்கம் ஆதரவோடு போட்டியிட்டார். தவிர, நாங்கள் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக வேண்டும், முதலமைச்சர் ஆக வேண்டும், அமைச்சராக வேண்டும் என்ற நோக்கம் அல்ல என்றார்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியை டெபாசிட் இழக்கச் செய்ததன் வாயிலாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். நாம் தமிழர் கட்சியை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் 3 இடங்களில் பேசவிடாமல், விரட்டி அடித்துத் துரத்தினார்கள். எனவே, எங்களை பெரியார் பெயரைச் சொல்லி 232 வாக்குகள் தான் பெற்றுள்ளோம் என கூறுவதற்கு உங்களுக்கு அருகதையில்லை.
அதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் கண்ணில்படவே இல்லை எனக் கூறியுள்ளீர்கள். உங்கள் அலுவலகத்திற்கு எதிரில் தான் பெரியார் படத்தை வைத்து எங்கள் அலுவலகம் செயல்பட்டது. எப்போது எங்களை பற்றி அச்சப்படுகிறீர்களோ?, கவலைப்படுகிறீர்களோ?, பேசுகிறீர்களோ? அப்போதே நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.
இப்போதும் நீங்கள் திராவிட மண் இல்லை, பெரியாரே ஒரு மண் எனப் பேசியதால் ஏற்கனவே பலர் வெளியேறி விட்டார்கள். தொடர்ந்து இப்படியே பேசினால், இன்னும் கொஞ்சம் நஞ்சம் இருப்பவர்களும் உங்களை விட்டு வெளியேறுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ”2026 தேர்தலிலில் பாமக கூட்டணி அமைத்தே போட்டியிடும்” - ஜி.கே.மணி பேட்டி
தொடர்ந்து பேசிய விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், "நாம் தமிழர் கட்சி ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் துடைத்தெறியப்படும். நீங்கள் சங் பரிவார், ஆர்எஸ்எஸ் பின்னணியில், பாஜக துணையோடு இருக்கிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. நாங்கள் தற்போது உங்களை அரசியல்ரீதியில், தேர்தல் களத்தில் வெற்றி கண்டுள்ளோம். வேறு எந்த களம் என்றாலும் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்" என கூறினார்.