சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சென்னையில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி பாரத் இந்து முண்ணனி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ்.யுவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று இஸ்லாமியர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பிரச்சனை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை. அந்த மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை கையில் வேல் ஏந்தி பேரணி நடத்த அனுமதி கேட்டு காவல்துறைக்கு மனு அளித்தும் அனுமதியளிக்கவில்லை. எனவே பிப்ரவரி 18ம் தேதி யாத்திரைக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளைந்திரையன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே இந்து முன்ணணி போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய போது, நிபந்தனைகளை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் என்ற மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் ஒரே குடும்பத்தினராக தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து இஸ்லாமியர்களிடையே கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜி.கே இளந்திரையன், பேரணி நடத்த வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (பிப் 14) மீண்டும் விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் பாரத் இந்து முண்ணனியில் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே இளந்திரையன் தீர்ப்பளித்தார்.