திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்தரன் மகன் செல்வக்குமரேசன் (வயது 38). இவர் நக்சல் தடுப்பு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக, முக்கூடல் அருகே சுத்தமல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்.9) இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த இளைஞர்கள், வடக்கு அரியநாயகிபுரத்தில் உள்ள செல்வக்குமரேசன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வீட்டின் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு, தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முக்கூடல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சுத்தமல்லி காவல் நிலையத்தில் தனிப்படை பிரிவு தலைமைக் காவலராக செல்வக்குமரேசன் பணியாற்றிய போது, சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்ற நபரைக் குற்ற வழக்குகள் தொடர்பாகக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சந்தன மரம் கடத்தல்: கூட்டு ரோந்து பணியில் தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர்!
அதனால், ஆத்திரமடைந்த முப்புடாதி ஏற்கனவே செல்வக்குமரேசனை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் பணிமாற்றம் செய்ததை நோட்டமிட்ட முப்புடாதி, அவரது நண்பர்களுடன் இணைந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது, வீட்டில் இருந்த கார் உள்ளிட்டவற்றை தாக்கி உடைத்துவிட்டு, தப்பியோடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, காவலர் வீட்டில் அரிவாளுடன் வந்து காரை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கடமையைச் செய்த காவலருக்கு குற்றவாளி தரப்பில் மிரட்டல் வந்ததாகத் தகவல் வெளியான நிலையில், சிலர் அதிரடியாக காவலரின் வீடு புகுந்து அரிவாள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.