ஐதராபாத்:உலக அளவில் பணம் கொழிக்கும் விளையாட்டுக்களில் ஒன்றாக கிரிக்கெட் காணப்படுகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றே சொல்லலாம்.
பெரிய தொழிலதிபர்கள் தொடங்கி பலர் இந்த விளையாட்டை பயன்படுத்தி நிறைய சம்பாதித்து கொள்கின்றனர். தங்களுக்கென்று ஒரு அணி மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து ஐபிஎல் போன்ற லிமிடெட் ஓவர் கிரிக்கெட் தொடர்களை நடத்தி அதில் பெரும் பணத்தை மாற்றிக் கொள்கின்றனர்.
ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய புரோக்கர்கள், வீரர்களை அணுகி அவர்களை சூதாட்டப் புகாரில் சிக்க வைத்துள்ளனர். ஒரு சில வீரர்கள் மறுத்தாலும் சில வீரர்களை அவர்கள் தங்கள் சூதாட்ட வலைக்குள் வீழ்த்தி விடுகின்றனர். ஆனால் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அந்த சூதாட்ட கூட்டத்தை ஒழித்துக்கட்டி உள்ளனர்.
தற்போதும் இது போன்ற சூதட்ட புகார்கள் ஆங்காங்கே தென்பட்டாலும் முன் காலத்துடன் ஒப்பிடுகையில் கடுமையான தண்டனை, வாழ்நாள் தடை உள்ளிட்ட தண்டனைகள் மூலம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு தடுக்கப்பட்டு உள்ளன. அப்படி சூதாட்ட வலையில் சிக்கி தங்கள் கேரியர் மற்றும் பெயரை கெடுத்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
முகமது அசாருதீன்:
சூதாட்ட புகாரில் சிக்கியவர்களின் பெயர் பட்டியலில் முகமது அசாருதீன் பெயரை தவிர்க்க முடியாது. கங்குலிக்கு முன் இந்திய அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டவர். கடந்த 2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்த அணியின் கேப்டன் ஹன்சி க்ரோன்ஜியை சூதாட்டகாரர்களிடம் முகமது அசாருதீன் அறிமுகம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் முகமது அசாருதீனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
அஜெய் ஜடேஜா:
தற்போது ஜாம்நகர் பேரரசின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள அஜெய் ஜடேஜாவும் மேட்ச் பிக்சிங் புகாரில் சிக்கி தடை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது அசாருதீனுடன் சேர்ந்து மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணையை தொடர்ந்து அஜெய் ஜடேஜா 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். இந்திய அணிக்காக அஜெய் ஜடேஜா 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஸ்ரீசாந்த்:
2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர் தான் இந்த ஸ்ரீசாந்த். கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவர் ஸ்பாட் பிக்சிங் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்து சிறைத் தண்டனை பெற்றார். தொடர்ந்து இவர் உள்பட மூன்று வீரர்களை பிசிசிஐ தடை செய்தது. தற்போது நீதிமன்ற சென்று ஸ்பாட் பிக்சிங் வழக்கில் நிரபராதி என ஸ்ரீசாந்த் தீர்ப்பு பெற்றார்.