சேலம்:கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ்நாடு பிரீமியர் லீக்கின்(TNPL 2024) 8வது சீசன் சேலத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கோலகலமாக தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் பேட்டியில் நடப்பு சாம்பியனான லைகா கோவை கிங்ஸ் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸை எதிர்கொண்டது.
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி கேப்டன் பாபா அபராஜித் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாலசுப்பிரமணியன் சச்சின் 53 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.
சேப்பாக் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அபிஷேக் தன்வர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக சந்தோஷ் குமார், ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் சந்தோஷ் குமார் முதல் ஓவரின் 2வது பந்தில்லேயே விக்கெட் இழந்து வெளியேற ஜெகதீசன் 18 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் பாபா அபராஜித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்கள் எடுத்துன் இருந்தநிலையில் ஷாருக்கான் வீசிய பந்தில் சச்சின் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரஞ்சன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை அடுத்து களமிறங்கிய பெர்னாண்டோ 2 ரன்னிலும், ஜிதேந்திர குமார் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். ஒரு கட்டத்தில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரின் கடைசி பந்தை சிக்ஸர் விளாசினார் அபிஷேக் தன்வர். இதனால் ஆட்டம் சூடி பிடித்தது.
இதன் பின்னர் 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இறுதி ஓவரை முகமது வீச அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் லைகை கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. 53 பந்துகளில் 63 ரன்கள் விளாசிய கோவை அணியின் பாலசுப்பிரமணியன் சச்சின் ஆட்டநாயகானாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக் 2024; 5 தமிழர்கள் உட்பட 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு!