சென்னை:19வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்த தமிழக வீரர் கமலினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பிப்ரவரி 3ஆம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே நடந்த இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி மகளிர் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கோப்பையை வென்ற மகளிர் கிரிக்கெட் அணியினர் மலேசியாவில் இருந்து டெல்லி வந்தனர். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக வீராங்கனை கமலினிக்கு விமான நிலையத்தில் பெற்றோர்கள் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமலினி, "19 வயதுக்குட்பட்டோர் மகளிர் உலகக் கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது இந்த மகிழ்ச்சியான தருணம் தொடர விரும்புகிறேன். என் அண்ணனை பார்த்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். எனக்கு அனைத்து உதவிகளும் செய்தது எனது தந்தைதான், எனது பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் நான் இந்த அளவுக்கு சாதனை படைக்க முடிந்தது.
இதையும் படிங்க: பள்ளிகளில் சூழல் மன்றங்கள் அமைக்கப்படும்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
எனக்கு நிறைய இடையூறுகள் இருந்தது அனைத்தையும் கடந்து வெற்றி பெற்றுள்ளேன். கிரிக்கெட்டில் சாதனை படைப்பதற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டும். தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் என்னுடன் நட்புடன் பழகினர். அந்த அணியின் கேப்டன் எனக்கு தோழி போல் பழகினார். அரை இறுதி போட்டி மிகவும் கடினமாக இருந்தது. அணியில் இடம் பெற்றிருந்த திரிஷா அவுட் ஆனா உடன் பயிற்சியாளர் என்னிடம்,'நீதான் இந்த போட்டியை முடித்து வைக்க வேண்டும்,'என கூறி அனுப்பி வைத்தார். அதன்படி நான் போட்டியில் சிறப்பாக விளையாடினேன்.
இந்த தருணத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை படிப்படியாகதான் முன்னேற முடியும். கடின உழைப்பு இருந்தால் அனைத்து பெண்களும் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைக்க முடியும்,"என்றார்.