பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
பதக்கம்:பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SU5 பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி, முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற துளசிமதி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதி போட்டியில் சீனாவை சேர்ந்த யாங் கியூஷியாவை எதிர்கொண்ட துளசிமதி முருகேசன், 17-21, 10-21 என நேர் செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மறுபுறம் வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் டென்மார்க்கை சேர்ந்த கேத்ரின் ரோசன்கிரென்னை எதிர்கொண்டார் மனிஷா ராமதாஸ்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முடிவில் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் டென்மார்க்கை வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார் மனிஷா. பேட்மிண்டன் போட்டியில் 2 பதங்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனைகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.
வாழ்த்து:இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதே போல் வெண்கலம் வென்ற வீராங்கனை மனிஷாவிற்கும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்."பாராஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கு வாழ்த்துகள்! உங்கள் தைரியமும், மன உறுதியும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து பிரகாசியுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சென்னை, புதுச்சேரியில் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்! ஒரு தமிழக வீரர் கூட இல்லை?