புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படும் நடவடிக்கை ஒன்றும் புதிய விஷயமல்ல. நீண்டகாலமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்பட்ட இந்தியர்கள் 104 பேர் அங்கிருந்து இந்தியாவுக்கு அண்மையில் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
அப்போது அவர், "சட்டவிரோத குடியேற்றத்தில் சிக்கிக்கொள்ளும் நமது குடிமக்கள் பிற குற்றங்களுக்கு இரையாகின்றனர். அவர்கள் மனிதாபிமானமற்ற நிலைமைகளின்கீழ் இடம்பெயர செய்யப்படுதல், கடினமான வேலை செய்தல் ஆகிய இரண்டிலும் சிக்கிக் கொள்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வின்போது உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளன," என்று அமைச்சர் பேசினார்.
மேலும் பேசிய அவர் "இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி தப்பிப்பிழைத்து நாடு திரும்பியவர்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை சொல்லி நாம் கேட்டுள்ளோம்.சட்டவிரோத குடியேற்றங்கள் கண்டறியப்பட்டால், அவர்களை தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ளும்படி கோருவது அனைத்து நாடுகளின் கடமையாகும்.
இது இந்தியாவால் மட்டும் பின்பற்றப்படும் ஓர் குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இது சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை இந்த அவையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதையும் படிங்க: டெல்லியை கைப்பற்ற போவது யார்? - வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! - DELHI ELECTION EXIT POLL
2009 -734 பேர், 2010 -799, 2011 - 567, 2012 -530, 2013 - 515, 2014 - 501, 2015 -708, 2016- 1303, 2017 - 1024, 2018- 1180, 2019 - 2042, 2020 - 1889, 2021 - 805, 2022 -862, 2023 - 670, 2024- 1368 மற்றும் 2025 இல இதுவரை 104 நபர்கள் அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளால் இந்த நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2012 முதல் நடைமுறையில் உள்ள இந்நடவடிக்கைகாக தனி விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இந்நடைமுறையில் நாடு கடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார