திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக திட்டமிடப்பட்டு பின்பு தள்ளிப்போனது நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ திரைப்படம். அதனால் ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகும் இன்றைய நாளையே பண்டிகையாக மாற்றி கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். தமிழ்நாடு முழுவதும் ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகும் பெரும்பாலான திரையரங்குகளில் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலையொட்டி வெளியான ’துணிவு’ திரைப்படம்தான் அஜித் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம். இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கென தனி கொண்டாட்டங்கள் மல்டிப்ளக்ஸ் தவிற மற்ற திரையரங்குகளில் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு முழுக்கவே இந்த கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று இரவில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகியுள்ள விடாமுயற்சி ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
திரையரங்குகளில் மட்டுமில்லாமல் இணையத்திலும் படத்திற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று காலை 9 மணி அளவில் ’விடாமுயற்சி’ திரைப்படம் திரையிடப்பட்டது.
குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கில் வெளியே அஜித் ரசிகர்கள் மேளதாளங்களுடன் நடனமாடி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அஜித்தின் படம் வெளியாகிறது இந்த படம் மாபெரும் வெற்றியை வெறும் சரித்திரத்தை உருவாக்கும் என கோஷங்கள் இட்டு உற்சாகமாக தங்களை சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். மேலும் "கடவுளே அஜித் கடவுளே அஜித்தே" என கோஷங்கள் எழுப்பி நடனம் ஆடி விடாமுயற்சி படத்தை அஜித் ரசிகர்கள் வரவேற்றனர்.
அதே போன்று தூத்துக்குடியிலும் பல்வேறு திரையரங்குகளில் ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் அஜித்தின் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்தும் பாலாபிஷேகம் செய்தும் ”கடவுளே அஜித்தே” என கோஷம் எழுப்பியும் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடினர்.
இதையும் படிங்க: ஹாலிவுட் தரத்தில் ஆக்சன் ரசிகர்களுக்கான விருந்து... அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ விமர்சனம்
மங்கத்தா படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் அஜித்குமாருடன் அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம், தற்போதுதான் வெளியாகியுள்ளது. சவால் நிறைந்த படப்பிடிப்பு சிக்கல்கள், கதையின் உரிமம் தொடர்பான சிக்கல் என பல்வேறு தடைகளை கடந்து இன்று வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கிறது.