மயிலாடுதுறை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலையொட்டி வெளியான ’துணிவு’ திரைப்படம்தான் அஜித் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம்.
'மங்கத்தா’ படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் அஜித்குமாருடன் அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள், பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகியுள்ள விடாமுய்ற்சி திரைப்படத்திற்காக இன்று காலை முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்குகளில் மட்டுமல்லாமல் இணையத்திலும் படத்திற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள்.
நேற்று இரவில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விடாமுயற்சி ரிலீஸ் களைகட்டி வருகிறது. தமிழ்நாட்டில் நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கென தனி கொண்டாட்டங்கள் மல்டிப்ளக்ஸ் தவிற மற்ற திரையரங்குகளில் நடைபெறுவது வழக்கம்.
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்த்திலுள்ள திரையரங்குகளில் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர் பேசுகையில், “விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்றுதான் படம் வெளியாகியுள்ளது.
இன்றைக்குத்தான் எங்கள் எல்லோருக்கும் பொங்கல் விழா. படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறோம். இப்போது வரை அஜித் படம் என்றால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. திரையரங்குகளில் பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கவில்லை. தியேட்டர் ஸ்கிரீனில் அஜித் ரசிகர்கள் விளம்பரம் விடவில்லை. தமிழ்நாடு முழுவதும் எந்த தியேட்டரிலும் ஸ்கீரின் விளம்பரம் இல்லை. காரணம் கேட்டால் அரசியலை காரணமாக சொல்கிறார்கள்.
விஜய்யுடன் சேர்த்து அரசியலை காரணமாக சொல்கிறார்கள். அஜித் ரசிகர்கள் நாங்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை. அரசியல் ஆக்காதீர்கள். எங்களுக்கு அஜித் மட்டும் போதும். அவர் சொன்ன நல்ல விஷயங்களை மட்டுமே செய்து வருகிறோம். அடுத்த படத்தின் வெளியீட்டின் போது எல்லா இந்த ஸ்கீரின் விளம்பரங்களை அனுமதிக்க வேண்டும்” என வருத்தத்துடன் பேசினார். திரையரங்கில் ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்... தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் காட்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால், அதிகப்படியான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து திரைப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் முதல் நாள் வசூலும் பெரிதாக இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.