மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹா வழிபாட்டு விவகாரத்தில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். தடை உத்தரவை மீறி போராட முயன்றவர்களை காவல்துறை கைது செய்தது.
இதனிடையே மதுரையைச் சேர்ந்த சுந்தர வடிவேல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையை ரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அனுமதி அளித்தது.
அந்த உத்தரவில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும், 1 மைக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும், வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக் கூடாது, ஆர்ப்பாட்டம் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதனையடுத்து பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 4 பிரிவுகளில், போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.