சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான செய்முறைத் தேர்வுகள் நாளை துவங்கி 28 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. மேலும் மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை உடனடியாக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12,11,10 வகுப்பு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ந் தேதி முதல் ஏப்ரல் 15 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வும் நடத்தப்படுகிறது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் நாளை தொடங்கி 14 ந் தேதி வரையும், பொதுத் தேர்வு மார்ச் 3 ந் தேதி முதல் 25 ந் தேதி வரையும் நடத்தப்படவுள்ளது. அவர்களின் விடைத்தாள் திருத்தப்பட்டு மே மாதம் 9 ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15 ந் தேதி முதல் 21 ந் தேதி வரையிலும், பொதுத் தேர்வு மார்ச் 5 ந் தேதி முதல் 27 ந் தேதி வரையில் நடத்தப்பட்டு, மே 19 ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 ந் தேதி முதல் 28 ந் தேதி வரையிலும், பொதுத் தேர்வு மார்ச் 28 ந் தேதி முதல் ஏப்ரல் 15 ந் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் மே 19 ந் தேதி வெளியிடப்பட உள்ளது. பொதுத் தேர்வினை சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுவாார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வினை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 446 பள்ளிகளில் 12 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வினை 2 கட்டங்களாக நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் சுற்றில் பிப்ரவரி 7 ந் தேதி முதல் 14 ந் தேதி வரையிலும், 2 ம் சுற்றில் பிப்பரவரி 15 ந் தேதி முதல் 21 ந் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவெண் அடிப்படையில் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை பிப்ரவரி 24 ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
செய்முறைத்தேர்வினை கண்காணிக்க நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர்கள் முதல் நாளில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று அறிவியல் செய்முறைத்தேர்விற்கான ஆய்வக உபகரணங்களை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.