சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், ஞானசேகரனை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு, அவர் பயன்படுத்திய செல்போன்கள், இரண்டு சிம் கார்டுகள், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வந்துள்ளனர். இதில், கைப்பற்றபட்ட இரண்டு சிம் கார்டுகளை வைத்து, கடந்த ஆறு மாத காலமாக ஞானசேகரன் பேசி வந்த அனைத்து இணைப்புகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை!
முன்னதாக, முதல் தகவல் அறிக்கையில், சம்பவதன்று ஞானசேகரன் செல்போனில் ஒரு நபரிடம் பேசிவிட்டு அந்த சாரிடம் மாணவியை தனிமையில் இருக்க சொன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஞானசேகரன் செல்போனில் யாரிடமாவது பேசி உள்ளாரா? என செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை உறுதி செய்ய ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, ஞானசேகரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் இன்று (பிப்ரவரி 06) பலத்த போலீஸ் பாதுகாப்புடன், காமராஜர் சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலைக்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.