இலங்கை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று (பிப்.19) தம்புல்லா பகுதியில் உள்ள ரங்கிரி தம்புல்லா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி தனது இன்னிங்ஸ்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்கா - குசல் மெண்டிஸ் ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் நிஸ்ஸங்கா முதல் பந்தில் பவுண்டரியை விளாசினார். 3வது ஓவரில் நிஸ்ஸங்கா தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரியை விளாசினார்.
நிஸ்ஸங்கா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த பின் தனஞ்சய டி சில்வா களமிறங்கினார். குசல் மெண்டிஸ் 23 ரன்கள் எடுத்து 5வது ஓவரில் அவுட் ஆனார். பின், சதீர சமரவிக்ரம களமிறங்க, தனஞ்சய டி சில்வா 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின், வனிந்து ஹசரங்கா களம் கண்டார்.
ஹசரங்கா சிக்ஸ், பவுண்டரி என மாறி, மாறி விளாசி 22 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் சரித் அசலங்கா களம் கண்ட வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். பின், ஏஞ்சலோ மேத்யூஸ் களம் இறங்கினார். பின், சதீர விக்ரம - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை சிக்ஸ், பவுண்டரி என மாறி மாறி விளாசினர். 19வது ஓவரில் மாத்யூஸ் தொடர்ந்து மூன்று சிக்ஸ்களை விளாசினார். 20வது ஓவரில் சதீர விக்ரம டி20 தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்த வேகத்தில் அவுட் ஆனார்.
அதன்படி, இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. இந்த போட்டியில் ஃபசல்ஹக் பாரூக்கி, நவீன்-உல்-ஹக் ஆகிய இருவரும் தலா 1 விக்கெட்டையும், அஸ்மத்துல்லாஹ், நபி ஆகிய இருவரும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.