ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனின் மகன்கள் இரட்டைமலை சீனிவாசன் (27), ஸ்டானின் (24). இரட்டைமலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. அதேபோல, அவரது தம்பி ஸ்டாலின் சி பிரிவு ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர். இந்த நிலையில், நேற்று (ஜன.18) அண்ணன், தம்பி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர்.
ஸ்டாலின் வீட்டின் அருகே ஆயில்சேரியிலும், அண்ணன் இரட்டைமலை சீனிவாசன் ஆவடி பகுதியிலும் என தனித்தனியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டாபிராம் மற்றும் ஆவடி போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக மர்ம கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது வாக்குவாதம் முற்றியதில் மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து ஓடவிட்டு வெட்டி சாய்த்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: தாம்பரம் அருகே ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்!
இந்த நிலையில், ஐந்து தனிப்படை அமைத்து கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், திருவள்ளூரில் 5 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர்.
கொலையாளிகள் மப்பேடு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வருவதை அறிந்த ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் துப்பாக்கி முனையில் 5 போரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரவீன், நவீன், கார்த்தி, ஜான், பாலாஜி ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொலையான சகோதரர்களின் முதல் அண்ணன் கக்கன் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தற்போது, கஜேந்திரனுக்கு இருந்த மூன்று மகன்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.