சென்னை: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் வசிப்பவர்கள், தங்கி பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட புறப்பட்டுச் சென்றனர்.
பொங்கல் விடுமுறை
இதையடுத்து பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழித்து பொதுமக்கள் மீண்டும் சென்னையில் நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி வந்தால் சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வார்கள் என்பதால் பொதுமக்கள் அனைவரும் 17,18,19 ஆகிய தேதிகளில் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டு சென்னை திரும்பும் படி தமிழக போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எச்சரித்த காவல்துறை
இதையடுத்து கடந்த வெள்ளி மாலை மற்றும் சனிக்கிழமை சிலர் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தனர். இந்தநிலையில் மூன்றாவது நாளாக இன்று பெரும்பாலான மக்கள் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் அதிகப்படியான மக்கள் இன்று தங்கள் சொந்த வாகனங்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளில் சென்னையை நோக்கி வருவதால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க கனரக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
மாற்று வழி யோசனை
அதில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் வரும் பொழுது, அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அந்த நேரத்தில் கனரக வாகனங்கள், எஸ்பி கோவில் ஒரகடம் சந்திப்பில் திரும்பி ஸ்ரீ பெரும்புதூர் வழியாக அவர்களின் இலக்கை சென்றடையலாம் எனவும், அதே போல் நாளை (ஜன.19) மதியம் 2 மணி வரை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கனரக வாகனங்கள் சென்று அதனை இலக்கை அடையலாம் எனவும் தெரிவித்தனர்.
ஒரு வழி பாதை
மேலும், சென்னையை நோக்கி தங்களின் சொந்த வாகனங்களில் வரும் மக்களின் வசதிக்காக, பல்லாவரத்தில் உள்ள புதிய மேம்பாலத்தில் நாளை மதியம் 2 மணி வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஸ்தம்பிக்கும் வண்டலூர் - பெருங்களத்தூர்
இந்த நிலையில், இன்று மாலை வரை பெருமளவில் தாம்பரம், பெருங்களத்தூர் வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத நிலையில், இன்று மாலைக்கு பிறகு அதிகப்படியான வாகனங்கள் சென்னையை நோக்கி அணிவகுத்ததால் வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கார், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆமை வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இன்று இரவு அதிகப்படியான வாகனங்கள் தொடர்ந்து சென்னை நோக்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் நள்ளிரவிலும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார்
இதனால் போக்குவரத்து போலீசார் தரப்பில், சொந்த வாகனங்களில் வரும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலை அல்லது வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலை அல்லது செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் வழியாக சென்னை நோக்கி செல்லலாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், அதிகப்படியான கார்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால், ஜிஎஸ்டி சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் காவலர்கள் தாம்பரம் - பெருங்களத்தூர் - வண்டலூர் - குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.