சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “எம்.ஜி.ஆர்.பெயரை உச்சரிக்காமல் தமிழ்நாட்டில் யாராலும் கட்சி நடத்த முடியாது. எம்.ஜி.ஆர் எடுத்தவுடன் முதலமைச்சர் பதவிக்கு வரவில்லை. மக்களுடன் பயணித்து, படிப்படியாக பதவிக்கு வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு வாரிசு இல்லை, நாம் தான் வாரிசு. சிறுவயதில் பட்டினியால் அவதி பட்டதால் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சாதனை படைத்தார். எம்.ஜி.ஆர் வழியில் அதிமுக இன்று வெற்றி நடைபோடுகிறது.
13 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடிவு:
தமிழகத்தில் பத்தாண்டு காலம் அதிமுக எதுவும் செய்யவில்லை என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சர் தனது மகனை துணை முதலமைச்சராக்கியுள்ளார். இது தான் திமுக சாதனை. ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். இந்த ஆட்சிக்கு 13-வது அமாவாசை தான் உள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை.. யாருக்கு ஆதரவு? - ஓ.பன்னீர்செல்வம் பதில்!
7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை அரசு பள்ளி மாணவர்கள் இன்று மருத்துவம் படிக்கிறார்கள். அவர்களின் கனவை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது. தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. 2019-2020-ஆம் ஆண்டிலேயே உயர் கல்வியில் நாம் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட்டோம், அதற்கு காரணம் அதிமுக.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்:
அதிமுக ஆட்சிக் காலத்தில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்த திட்டம் இப்போது என்ன ஆனது? ஒரு மடிக்கணினியின் விலை ரூ.12,000. இது போன்ற பல திட்டங்களை நிறைவேற்றிய காரணத்தினால் உயர் கல்வியில் இன்று தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்.
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே ஒளிபரப்பினால் இன்று திமுக இல்லாமல் போகும். மகளிர் உரிமைத் தொகை திமுக கொடுக்கவில்லை. நாங்கள் வாதாடி, போராடி கொடுக்க வைத்தோம். ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் உதவித் தொகை கொடுக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் சார் என தெரிவித்துள்ளார். யார் அந்த சார்? என்று இன்னும் தெரியவில்லை. இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலத்தில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இருக்கிறது. இதுதான் திமுக அரசின் சாதனை” என இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.