ஐதராபாத்:பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட இந்திய அணி ஒரு போதும் செல்லாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை விட்டுக் கொடுக்கும் எண்ணம் துளியும் இல்லை எனக் கூறி வருகிறது. பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே நடைபெறும் பனிப் போரால் மொத்தமாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையே ரத்து செய்ய ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பை நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஹைபிரீட் மாடலில் தொடரை நடத்தும் முடிவையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானுடன் நடத்த இரண்டு நாடுகள் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியா முன்வராத நிலையில், அந்த அணி விளையாடும் போட்டிகளை மட்டும் ஹைபிரீட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஐக்கிய அரபி அமீரகம் அல்லது இலங்கை ஆகிய நாடுகளில் இந்தியா விளையாடும் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி தொடர்களை நடத்த தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. அதனால் ஐசிசியின் இரண்டாவது தேர்வாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா தனது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில், உள்ள துபாயில் அல்லது ஷார்ஜாவில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு ஏற்றவாறு போட்டி அட்டவணையில் மாற்றம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் போக்குவரத்து சூழல் உள்ளிட்ட காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த முடியாமல் போகும் சூழலில் அடுத்த வாய்ப்பாக இலங்கை இருக்கும் எனக் கருதப்படுகிறது.கலாசாரம் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் சூழலியல் கொண்ட இடமாக இலங்கை காணப்படுகிறது.
இதையும் படிங்க:Champions Trophy 2025 Cancel: சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ரத்து? ஐசிசி அதிரடி முடிவு?