சென்னை: நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெமினி ஃபிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2012-ல் உருவான திரைப்படம் ‘மதகஜராஜா’. 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. 12 வருடங்களாக கிடப்பில் இருந்த மதகஜராஜா ஒரு வழியாக வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுந்தர்.சி, குஷ்பு, விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் நடிகர் விஷால் கடும் காய்ச்சலுடன் பங்கேற்றார். அவர் மேடையில் காய்ச்சலுடன், மைக்கை பிடிக்க முடியாமல் கை நடுக்கத்துடன் பேசுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், விஷாலின் உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், 'விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை மற்றும் ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.