டிரினிடாட் (வெஸ்ட் இண்டீஸ்): டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், டிரினிடாடில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இன்றைய ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. மார்கோ ஜான்சென் வீசிய முதல் ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் என கருதப்படும் குர்பாஸ் டக் அவுட்டானார். பின்னர் குல்பதீன் சற்று அதிரடி காட்டிய நிலையில் ஜான்சென் பந்தில் போல்டானார்.
அடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இப்ராஹிம் சத்ரான்(2), கரோதே (2), அசமதுல்லா (10), ஜனத் (8) ஆகியோர் தங்களது உத்வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் வந்த வேகத்தில் 2 பவுண்டரி அடித்து வேகம் காட்டினார்.
ஆனால், அடுத்த ஓவரிலேயே நார்க்கியாவின் பந்தில் போல்டானார். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜான்சென் 3 விக்கெட்களும், ரபாடா, நார்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பத்தில் சிறிது பொறுமையாக ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கிய டி காக், ஃபரூகி பந்தில் 5 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த மார்க்ரம், ஹெண்டிரிக்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்தனர்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி வரும் 29ஆம் தேதி நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சோக்கர்ஸ் என கிரிக்கெட் ரசிகர்கள் செய்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இன்று இரவு நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: "இவர் ஒருவர் மட்டும்தான் எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்தார்" - ரஷித் கான் கூறியது யாரை? - T20 World Cup 2024