தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இன்னும் ஐபிஎல் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயா... ஆர்சிபி ஆண்கள் அணியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! - ipl rcb memes and trolls

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி நேற்று ஐபிஎல் கோப்பை வென்றதையடுத்து, பெங்களூரு ஆடவர் அணியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

ஆர்சிபி ஆண்கள் அணியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஆர்சிபி ஆண்கள் அணியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 4:24 PM IST

சென்னை: மகளிருக்கான 2வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி நிதானமாக விளையாடியது.

பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதிம் மந்தனா 31 ரன்கள் எடுத்தார். பின்னர் 3வது விக்கெட்டுக்கு எல்லிஸ் பெர்ரியுடன் இணைந்த ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி அணியை கரை சேர்த்தனர். இதனையடுத்து பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது. கடந்த முறை மும்பை மகளிர் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் இந்த முறை பெங்களூரு அணி வென்றுள்ளது.

இதனையடுத்து ஆர்சிபி ஆடவர் அணி வீரர் விராட் கோலி பெண்கள் அணியின் கேப்டன் மந்தனாவிற்கு வீடியோ கால் மூலம் பேசி வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக ஆடவர், பெண்கள் என இரண்டு ஐபிஎல் தொடர்களையும் சேர்த்து பெங்களூரு அணி வெல்லும் முதல் ஐபிஎல் கோப்பை இதுவாகும். கடந்த 2007ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை ஐபிஎல் ஆடவர் அணி கோப்பை வென்றதில்லை.

இந்நிலையில் பெண்கள் ஐபிஎல் தொடங்கி இரண்டாவது தொடரிலேயே ஆர்சிபி பெண்கள் அணி கோப்பை வென்றதால் நெட்டிசன்கள் ஆர்சிபி ஆண்கள் அணியை மீம்ஸ் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர். ஆர்சிபி (RCB) பெண்கள் அணி கோப்பை வென்றதை அனைவரும் கொண்டாடி வருவது போலவும், ஆர்சிபி ஆண்கள் அணி ரசிகர்கள் சோகமாக இருப்பது போல பதிவிட்டுள்ளனர். மேலும் ஆர்சிபி மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆடவர் அணி வீரர்களுக்கு எப்படி ஐபிஎல் கோப்பையை வெல்வது என வகுப்பு எடுக்கிறார். நெட்டிசன்கள் மட்டுமின்றி ராஜஸ்தான் ஐபிஎல் அணி தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக ஆர்சிபி ஆண்கள் அணியை கலாய்த்து பதிவிட்டுள்ளனர்.

அதேபோல் ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் மற்றொருபுறம் ஆர்சிபி ஆடவர் அணிக்காக இவ்வளவு வருடம் கடுமையாக உழைத்த விராட் கோலிக்காக இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என ஏக்கத்துடன் ஒரு சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த முறையாவது ஆர்சிபி ஆடவர் அணி கோப்பை வெல்லுமா அல்லது எப்போதும் போல இதயங்களை வெல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம் என மற்ற ஐபிஎல் அணி ரசிகர்கள் தங்கள் பங்கிறகு மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூரு பெண்கள் அணிக்கு வாழ்த்து தெரிவித்தும், பெங்களூரு ஆடவர் அணி கோப்பை வென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் ஆர்சிபி ஆடவர் அணியை குத்திக் காட்டும் வகையில் உள்ளதாக ஆர்சிபி அணி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது ஆர்.சி.பி அணி.. பெங்களூரு அணி வீராங்கனைகளுக்கு குவியும் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details