ஐதராபாத்:18வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த மாத இறுதியில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வைத்து மெகா ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 அணிகளும் தங்களது தக்கவைப்பு வீரர்ள் பட்டியலை வெளியிட்டது.
தக்கவைப்பு வீரர்கள் பட்டியல்:
10 அணிகளும் சேர்த்து அதிகபட்சமாக 46 வீரர்களை தக்கவைத்துள்ளன. மற்ற வீரர்கள் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல், பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன், 2024 ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை அணியை பொறுத்தவரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, மதீஷ பத்திரனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ் தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். இதில் ரூதுராஜ் கெய்க்வாட்டுக்கு 18 கோடி ரூபாயும், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தலா 12 கோடி ரூபாயும் ஊதியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம்:
5 முறை கோப்பை வென்று தந்த எம்.எஸ் தோனி அன்கேப்டு பிளேயராக 4 கோடி ரூபாய் ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்னை அணியின் கைவசம் ஏறத்தாழ 45 கோடி ரூபாய் வரை உள்ள நிலையில், அதைக் கொண்டு அடுத்த கட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பிங் பணியை கவனித்துக் கொள்ள அனுபவம் வாய்ந்த வீரரின் தேவை என்பது அதிகம் உள்ளது. இதனால் மெகா ஏலத்தில் ரிஷப் பன்ட் அல்லது வேறு ஒரு அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பரை விலைக்கு வாங்க சென்னை அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சென்னை அணி வாங்க விரும்பும் டாப் 6 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
டிவென் கான்வாய்:
சென்னை அணி தன்னிடம் கைவசம் உள்ள ஒரேயொரு ஆர்டிஎம் கார்டு மூலம் டிவென் கான்வாயை தக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய டிவென் கான்வாய் மொத்தம் 23 ஆட்டங்களில் விளையாடி 923 ரன்கள் குவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் இந்த முறை அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அண்மைக் காலங்களாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அஸ்வினை சென்னை அணி கைப்பற்ற தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர வாஷிங்டன் சுந்தர் மீதும் சென்னை அணியின் பார்வை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றபடி சென்னை அணியில் இருந்து இந்த முறை கழற்றிவிடப்பட்ட 4 வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்க அணி நிர்வகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களில் ரச்சின் ரவீந்திரா, தீபக் சஹர், ஷர்துல் தாகூர், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் எனக் கூறப்படுகிறது. இது தவிர ரிஷப் பன்ட் மீது சென்னை அணியின் பார்வை திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! கடைசி ஆள பார்த்தா ஷாக் ஆகிருவீங்க!