ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய செயலாளராக தேவஜித் சைகியா, பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ள வாரியத்தின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தெரிகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா. சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதி பிரப்தேஜ் சிங் பாட்டியா. இருவரும் முறையே, பிசிசிஐ-யின் முக்கிய பொறுப்புகளான செயலாளர், பொருளாளர் பதவிக்கு விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நடைபெறவுள்ள பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் கூட்டத்தில் இருவரின் பதவி நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ செயலாளராக பதவி வகித்துவந்த ஜெய் ஷா, வாரியத்தின் தலைவர் ஆனதையடுத்து செயலாளர் பதவிக்கு சைகியா தேர்வாக உள்ளார். பிசிசிஐ பொருளாளராக பொறுப்பு வகித்துவந்த ஆஷிஷ் செல்லர் இடத்துக்கு பாட்டியா நியமிக்கப்பட உள்ளார்.
பிசிசிஐ செயலாளர் பொறுப்பில் இருந்து ஜெய் ஷா விலகியதையடுத்து, வாரியத்தின் தற்போதைய இடைக்கால செயலாளராக சைகியா செயல்பட்டு வருகிறார். பொருளாளர் பதவிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் பாட்டியா விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா! உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிக்கான வாய்ப்பை இழந்த இந்தியா!
யார் இந்த தேவஜித் சைகியா ?
அசாம் மாநில முன்னாள் கிரிக்கெட் வீரரான தேவஜித் சைகியா, கர்னல் சிகே நாயுடு டிராபி மற்றும் ரஞ்சி டிராபி ஆகியவற்றில் விளையாடியுள்ளார். 1990-91 ஆண்டில் நான்கு முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன் கிழக்கு மண்டலத்திற்காக விளையாடியுள்ளார்.
அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்தின் (ஏசிஏ) செயலாளராக இவர் பணியாற்றியபோது, அசாமில் முதல்முறையாக மாவட்டங்களுக்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டியை நடத்தி காட்டியுள்ளார். கவுகாத்தி விளையாட்டு சங்கத்தின் (ஜிஎஸ்ஏ) பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.