தர்மசாலா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்.10) தர்மசாலாவில் நடைபெற்ற 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞசர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் விராட் கோலி 92 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து ரஜத் படிதார் 55 ரன்களும், கேமரூன் க்ரீன் 46 ரன்களும் எடுத்து அணியின் 240 ரன்களை தாண்ட பக்கபலமாக இருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டும், வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், கேப்டன் சாம் கரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது.
தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஜானி பேர்ஸ்டோவ், ரில்லி ரோஸ்சவு ஆகியோர் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு திருப்பி ரன் குவித்த வந்த இந்த ஜோடியை லாக்கி பெர்குசன் பிரித்தார்.
அவரது பந்துவீச்சில் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் சீரான இடைவெளியில் பஞ்சாப் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. நிலைத்து நின்று அரை சதம் கடந்து விளையாடி வந்த ரில்லி ரோஸ்சவு தன் பங்குக்கு 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.