ஐதராபாத்:2024ஆம் ஆண்டு தொடங்கியது முதலே இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருடன் ஆண்டை தொடங்கிய இந்திய அணி அதன்பின் ஜனவரி - மார்ச் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
டெஸ்ட் கிரிக்கெட் நிறைவடைந்த அடுத்த சில நாட்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதால் இந்திய வீரர்கள் அதில் கலந்து கொண்டு விளையாடினர். ஐபிஎல் முடிந்த 5 நாட்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்த ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியா கலந்து கொண்டது.
கலந்து கொண்டது மட்டுமின்றி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்று வரலாறு படைத்தது. டி20 உலக கோப்பை முடிந்த கையோடு சுப்மான் கில் தலைமையிலான இந்திய இளம் படை ஜிம்பாப்வே கிளம்பிச் சென்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடின.
தொடர்ச்சியாக கடந்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இப்படி ஆண்டு தொடங்கியது முதல் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் இந்திய வீரர்கள் இலங்கை தொடருக்கு பின்னர் சற்று ஓய்வில் உள்ளனர்.
விராட் கோலி லண்டன் பறந்த நிலையில், நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா கிரீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்படி சீனியர் வீரர்கள் தற்போது விடுமுறையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை சாலையில் லம்போர்கினி காரில் சீறிப் பாய்ந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.