தஞ்சாவூர்: செல்லப்பிராணிகளான நாய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாய்கள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தஞ்சாவூரில் இன்று இக்கண்காட்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விதவிதமான நாய்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், நாய்கள் கண்காட்சி SPCA வளாகத்தில் இன்று (பிப்.9) நடைபெற்றது. இக்கண்காட்சியைத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கண்காட்சியில் பங்கேற்ற நாய்களை பார்வையிட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் விவரம் கேட்டறிந்தார். மேலும், கண்காட்சியில் பங்கேற்ற செல்லப் பிராணிகளை அன்போடு தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர், "பாரம்பரிய நாய் இனங்களைப் பாதுகாக்கவும், செல்லப் பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தவும், ஆதரவற்ற சுற்றித் திரியும் நாய்களை தத்தெடுக்கவும், பிராணிகள் வதைக் கொடுமையில் சிக்காமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, ஆலங்கு, கொம்பை, ஜெர்மன் ஷெபர்ட், லாப்ரடார், ரெட்ரீவர, சைபீரியன் ஹஸ்கி, கோல்டன் ரெட்ரீவா உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாய்கள் என பல்வேறு வகைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாய்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், சிறந்த நாட்டு மற்றும் அந்நிய வகைகளுக்கு விருதுகளும், நாய்களின் புத்திசாலித்தனம் மற்றும் கட்டுப்பாட்டுத்திறன் பரிசோதிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறந்த நாய் பராமரிப்பு மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்த வல்லுநர்கள் விளக்கமும் இந்த கண்காட்சியில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, நாய் தத்தெடுப்பு முகாமும் நடைபெற்றது. அதில், கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்து நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி இலவசமாகப் போடப்பட்டது.
இதையும் படிங்க: கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 7-வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடக்கம்!
இந்த கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு செல்லப் பிராணிகளுக்கு தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். மேலும், இந்நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் முத்துக்குமார், கால்நடைத் துறை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.