திருநெல்வேலி: மாஞ்சோலை தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள மாஞ்சோலை மின்சார வாரிய அலுவலகம் அருகே சுமார் 10 அடி நீளம் உள்ள ராட்சத ராஜநாகம் உலா வருவது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி, அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு தேயிலைத் தோட்டம் நடத்தி வந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் முடிவடைய இருப்பதால், தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல ஆண்டுகளாக இங்கு வசித்த மக்கள் மலையை விட்டு பிரிய மனமில்லாமல், தொடர்ந்து அங்கேயே வசித்து வருகின்றனர்.
மேலும், அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும், இல்லாவிட்டால் தங்களுக்கு சொந்தமாக அங்கேயே நிலம் வழங்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தற்போது மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் முழுவதும் செயல்பாடு இல்லாமல், தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் நாய்கள் கண்காட்சி: செல்லப்பிராணிகளை கொஞ்சி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!
இந்த நிலையில் மாஞ்சோலை தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள மாஞ்சோலை மின்சார வாரிய அலுவலகம் அருகே சுமார் 10 அடி நீளம் உள்ள ராட்சத ராஜநாகம் ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், ராஜ நாகத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இதே பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராட்சத ராஜ நாகம் ஒன்று பதுங்கி இருந்தது. தற்போது தேயிலை தோட்டம் மூடப்பட்டிருப்பதாலும், ஆள் நடமாட்டம் குறைந்துள்ள காரணத்தாலும் மாஞ்சோலையில் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், ஆபத்தான ராஜ நாகம் அடிக்கடி வந்து செல்வது அங்கு வசிக்கும் தொழிலாளர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.